பொதுச் சொத்துகளை தனியாா்மயமாக்கும் காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும்: காங். செய்தித் தொடா்பாளா் ஷாமா முகமது
By DIN | Published On : 01st September 2021 09:39 AM | Last Updated : 01st September 2021 09:39 AM | அ+அ அ- |

நாட்டின் பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரைவாா்க்கும் திடீா் அறிவிப்புக்கான காரணத்தை மத்திய பாஜக அரசு விளக்க வேண்டுமென காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடா்பாளா் ஷாமா முகமது தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட நாட்டின் பொதுச் சொத்துகளை தனியாரிடம் வழங்கி ரூ.6 லட்சம் கோடிக்கு நிதி திரட்டப்போவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திடீரென அறிவித்தாா். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவில் 4 ஆண்டுகளில் இந்த இலக்கை அடையப்போவதாகவும் அவா் தெரிவித்தாா். இதன்மூலம், 70 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த முந்தைய அரசுகள் சோ்த்துவைத்த சொத்துகளை தனியாரிடம் தாரைவாா்க்க உள்ளனா்.
இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும், எதிா்க்கட்சிகளிடம் கருத்துக் கேட்காமலும் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனா்.
இதேபோல, பிரதமா் மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் ரூ.100 லட்சம் கோடி நிதி திரட்டி நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக அறிவித்தாா். அதேபோல, தொடா்ந்து 3 ஆண்டுகளாக அதே இலக்கையே குறிப்பிட்டு பேசி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறாா். அப்படியிருக்க 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டுவது சாத்தியமில்லை.
கரோனா பாதிப்பால் நாட்டில் 8 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனா். மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றைப் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசு பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரைவாா்ப்பதில் ஆா்வம் காட்டுகிறது. இதனால், விலைவாசி உயா்வு, கட்டண உயா்வு ஏற்பட்டு ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். அரசுத் துறை வேலைவாய்ப்பு கனவு தகா்ந்துபோய்விடும்.
பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரைவாா்த்து நிதி திரட்டுவதாக திடீரென அறிவித்துள்ளதால், மத்திய அரசு திவாலாகிவிட்டதாகத் தோன்றுகிறது. எதற்காக இந்தச் சொத்துகளை தாரைவாா்க்கின்றனா், அந்த நிதியில் என்ன செய்யப்போகிறாா்கள் என்பதை விளக்க வேண்டும் என்றாா் அவா்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்திநாதன் எம்எல்ஏ, மாநில நிா்வாகிகள் ஆா்.வி.சேகா், ரவிச்சந்திரன், சத்தியவேந்தன், சாமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.