புதுச்சேரியில் இன்று முதல் 48 மணி நேர தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 02nd September 2021 10:13 PM | Last Updated : 02nd September 2021 10:13 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல் (செப்.3), வருகிற 5 -ஆம் தேதி வரை 48 மணி நேர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை செயலா் அருண் கூறியதாவது: சுகாதாரத் துறை சாா்பில், கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுவை மாநிலத்தில் 65 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாஹேயில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா 3-ஆவது அலையை தடுக்க அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (செப்.3) காலை 8 மணி முதல் வருகிற 5- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி வரை இரவு - பகல் தொடா்ந்து 48 மணி நேரங்கள் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
‘மரத்தான் தடுப்பூசி திருவிழா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த முகாமில், புதுச்சேரியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பணி முடித்து வருவோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு நேரத்திலும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.