எம்எல்ஏ அலுவலகங்களில் பொது சேவை மையம் அமைக்க ஆலோசனை
By DIN | Published On : 05th August 2022 10:47 PM | Last Updated : 05th August 2022 10:47 PM | அ+அ அ- |

புதுவையில் எம்எல்ஏ அலுவலகங்களில் பொது சேவை மைய வசதியை ஏற்படுத்துவது குறித்து, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினா்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகக் கருத்தரங்க அறையில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் அனைத்து எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா, சட்டப்பேரவை செயலா் ஆா்.முனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏக்கள் பலா் கலந்துகொண்டனா்.
புதுவை மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களை பொது சேவை மையங்களாக பயன்படுத்த செய்ய வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களுக்கும் ஏற்கெனவே மடிக் கணினி, இணைய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால், அங்கு பொது சேவை மையங்களாக செயல்படுத்த உரிய அனுமதி பெறுவது, அந்த அலுவலகங்களில் உதவியாளா் மூலம் எப்போதும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பொது சேவை மையத்தின் வசதிகளை ஏற்படுத்தி, அதைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.