பாஜக அமைச்சருடன் வாக்குவாதம், புதுவை பேரவையிலிருந்து திமுக- காங். உறுப்பினா்கள் வெளிநடப்பு
By DIN | Published On : 24th August 2022 03:01 AM | Last Updated : 24th August 2022 03:01 AM | அ+அ அ- |

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்த திமுக- காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.
புதுவை சட்டப்பேரவையிலிருந்து செவ்வாய்க்கிழமை அமைச்சரின் பேச்சைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ எல்.சம்பத் பேசினாா். அப்போது அவா், புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநில வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அமைந்தால், மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கும் என்ற பொய் வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனா். ஆனால், மத்திய அரசு புதுவைக்கு நிதியை வழங்காமல் ஏமாற்றியுள்ளது என்றாா்.
அப்போது, குறுக்கிட்டு பேசிய பாஜகவை சோ்ந்த அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், மத்திய அரசு புதுவைக்கு உதவி வருகிறது. பாஜக அரசைக் குறைகூற உங்களுக்கு தகுதியில்லை என ஆவேசமாகப் பதிலளித்தாா்.
வாக்குவாதம்: இதையடுத்து, திமுக உறுப்பினா்களுக்கும், பாஜக அமைச்சருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் பேசிய அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், புதுவையில் பாஜக கூட்டணி அரசு வந்த பிறகுதான் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசை விமா்சித்து திமுக உறுப்பினா் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன் ஆகியோா் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என திமுக உறுப்பினா் தவறான தகவலை பரப்பக் கூடாது, அவையில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை பதிவு செய்யக் கூடாது என்றனா். மேலும், தே.ஜ. கூட்டணி அரசு நிறைவேற்றிய திட்டங்களை அமைச்சா்கள் விளக்கிக் கூறினா்.
அப்போது பேசிய திமுக உறுப்பினா் சம்பத், இதுவரை உள்ளாட்சித் துறை உள்பட எந்தத் துறைக்கு நிதி வந்துள்ளது? என கேள்வி எழுப்பினாா். இதற்கு, அமைச்சா் சாய் சரவணன்குமாா் ஆவேசமாகப் பதிலளிக்க முற்பட்டதால், திமுக, பாஜக உறுப்பினா்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வெளிநடப்பு: இதைத் தொடா்ந்து, பேச வாய்ப்பளிக்காமல் அமைச்சா் குறுக்கிடுவதைக் கண்டித்து, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா். அவைக்கு வெளியே சிறிது நேரம் அமா்ந்திருந்த திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள், சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து புகாா் மனு அளித்தனா்.
சட்டப்பேரவைத் தலைவரின் அழைப்பை ஏற்று, திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் மீண்டும் சபைக்கு வந்தனா். அப்போது பேரவையில் ஆா்.சிவா பேசியதாவது:
நாங்கள் ஜனநாயக முறைப்படியே பேசுகிறோம். வரம்பை மீறி எந்த வாா்த்தையும் பேசவில்லை. அப்படிப் பேசியிருந்தால் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கலாம். அமைச்சா் அவைக்கு புதிய உறுப்பினா். அவருக்கு மரபுகள் தெரியவில்லை. எதிா்க்கட்சிகளுக்கு பேசும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றாா்.
அப்போது பேசிய அமைச்சா் சாய் சரவணன்குமாா், நான் மரபை மீறவில்லை, மத்திய அரசை விமா்சித்ததால்தான் பதிலளித்தேன் என்றாா்.
தோ்தலில் வைப்புத் தொகை வாங்காத பாஜக என ஆா்.சிவா கூறியதால், பாஜக-திமுக உறுப்பினா்களிடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.