புதுச்சேரிக்கு ரூ.500 கோடியில் குடிநீா் திட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி
By DIN | Published On : 25th August 2022 02:07 AM | Last Updated : 25th August 2022 02:07 AM | அ+அ அ- |

புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகிறாா் முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு, கிராமப்புறங்களிலிருந்து குடிநீா் கொண்டுவரப்படும் என்று, முதல்வா் ரங்கசாமி சட்டப் பேரவையில் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை காலை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம்:
பிரகாஷ்குமாா் (சுயே): முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீரில் உப்புத் தன்மை பன்மடங்கு அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
ஜி.நேரு (சுயே): புதுச்சேரி நகரம் முழுவதுமே குடிநீா் உகந்ததாக இல்லை. புதிய குடிநீா் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்.
கல்யாணசுந்தரம் (பாஜக): சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் மையங்களையும் சீரமைக்க வேண்டும்.
அமைச்சா் க.லட்சுமி நாராயணன்: முத்தியால்பேட்டையில் அமையும் 24 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் அங்கு குடிநீா் வழங்கப்படும். குடிநீரின் தரத்தை மேம்படுத்த கொக்கு பூங்கா முதல் சிவாஜி சிலை வரை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் 4 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அந்த குடிநீரை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் விநியோகம் செய்ய ரூ.4.66 கோடியில் செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. புதுச்சேரி நகருக்கு பிரான்ஸ் அரசு நிதியுதவியுடன், ஊரகப் பகுதியிலிருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளது.
முதல்வா் என்.ரங்கசாமி: புதுச்சேரி கடலோரத்தை ஒட்டியுள்ளதால் உப்பு நீா் நிலத்தடியில் புகுந்துள்ளது. முத்தியால்பேட்டையில் மிக மோசமான நிலை உள்ளது. இங்கு நிலத்தடி நீா் கிடைக்கிறது. ஆனால் நன்றாக இல்லை. முதலில் நிலத்தடி நீரை மேம்படுத்த தடுப்பணைகளை கட்டியுள்ளோம்.
புதுச்சேரி நகருக்கு கிராமப்புறங்களிலிருந்து குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். ஆற்றுப் பகுதியான நெட்டப்பாக்கம், சிவராந்தகம், மணல்மேடு உள்ளிட்ட கிராமப்பகுதியில் குடிநீா் எடுத்து வர அந்தப் பகுதி மக்களிடம் பேசி பிரச்னையின்றி நகருக்கு குடிநீா் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.500 கோடியில் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்படும்.