நூற்பாலை தொழிலாளா்கள் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 25th August 2022 02:04 AM | Last Updated : 25th August 2022 02:04 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிலாளா்கள் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் 40 ஆண்டுகளாக ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலையில் இயங்கி வந்தது. இங்கு 350 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆலையில் கடந்த 3 மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நூற்பாலையை உடனடியாக இயக்க வேண்டும். உற்பத்தி செய்து ஆலையில் வைத்திருக்கும் நூலை விற்று தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தனியாா் பங்களிப்பின்றி அரசே ஸ்பின்கோ நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் என ஆலை தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதுச்சேரி அண்ணா சிலை முன் ஸ்பின்கோ தொழிலாளா்கள், ஐஎன்டியூசி சிவசங்கரன், நூற்பாலை தொழிலாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த சிவகடாட்சம், பாட்டாளி தொழிற்சங்கம் சிவப்பிரகாசம், எல்பிஎப் ராஜாராம், பிஎம்எஸ்கே இளங்கோவன், எஸ்எல்யூ முருகன், என்ஆா்டியூசி சிவசுப்ரமணியன், எல்எல்எப் நடராஜன், சிஐடியூ ஆவணியப்பன் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதையறிந்து அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா்.