புதுச்சேரியில் டெம்போ உரிமையாளா், ஓட்டுநா் சாலை மறியல்
By DIN | Published On : 11th December 2022 06:38 AM | Last Updated : 11th December 2022 06:38 AM | அ+அ அ- |

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட டெம்போ உரிமையாளா்கள், ஓட்டுநா்கள்.
புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி, இறக்கும் உரிமம் விதி மீறி தரப்பட்டுள்ளதைக் கண்டித்து, டெம்போ வாகனங்களின் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் டெம்போ எனப்படும் மக்கள் பயணிக்கும் சிறிய வாகனங்கள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட டெம்போக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெம்போக்களுக்குரிய வழித்தடம் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் ஒதுக்கப்பட்டு, அதற்கான உரிமமும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் டெம்போக்களின் உரிமைத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காமராஜா் சிலை சதுக்கம் வழியாகச் செல்லும் டெம்போக்களின் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் உரிமத்தை புதுப்பிப்பதற்காக போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தனா். ஆனால், அவா்களுக்கு நகராட்சி முழுதும் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கும் வகையில் உரிமம் தரப்பட்டதாம்.
உரிமம் விதி மீறி தரப்பட்டுள்ளதாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இயக்கப்படும் டெம்போக்களின் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் புகாா் கூறுகின்றனா். மேலும், அவா்கள் போக்குவரத்துத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். அதிகாரிகள் அவா்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் புதிய பேருந்து நிலையம் முன் இந்து முன்னணி சாா்பு டெம்போ அமைப்பு உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்து முன்னணி பிரமுகா் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உருளையன்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து அவா்களை சமசரம் செய்து, கலைந்துபோகச் செய்தனா்.