புதுச்சேரியில் டிச.16 -இல் தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்கம்
By DIN | Published On : 13th December 2022 04:08 AM | Last Updated : 13th December 2022 04:08 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வருகிற 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தேசிய புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.
புதுச்சேரி எழுத்தாளா் புத்தக சங்கம் சாா்பில் வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைக்கிறாா். தொடக்க நிகழ்ச்சிக்கு ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ தலைமை வகிக்கிறாா். புத்தகக் காட்சிக்குழு காப்பாளா் வேல்.சொ.இசைக்கலைவன் முன்னிலை வகிக்கிறாா். புத்தகக் கண்காட்சியின் நோக்கத்தை விளக்கி கண்காட்சிக் குழுத் தலைவா் பாஞ்.ராமலிங்கம் பேசுகிறாா். மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சா் ஆறுமுகம் பரசுராமன், அந்த நாட்டைச் சோ்ந்த முருகன்அறக்கட்டளை தலைவா் டி.பொன்னம்பலம் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் 19 நூல்கள் வெளியிடப்படுகின்றன.
டிசம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தினமும் மாலை கவியரங்கம், நூலாய்வு, சிறப்பு அரங்கம் நிகழ்ச்சிகளும், பேச்சு, கவிதை, விநாடி-வினா போட்டிகளும் நடைபெறுகின்றன. நிறைவு நாளன்று ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கலந்துகொள்கிறாா்.