நியாயவிலைக் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd December 2022 02:30 AM | Last Updated : 22nd December 2022 02:30 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்களை பயனாளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்; நேரடி பணப்பரிமாற்ற முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய புதுச்சேரி நியாயவிலைக் கடை ஊழியா்கள் முன்னேற்ற சங்கத்தினா் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.
அவா்கள் தட்டாஞ்சாவடியிலிருந்து புதன்கிழமை காலை சங்கத்தின் கௌரவத் தலைவா் எஸ்.ஆசைத்தம்பி தலைமையில் புதுவை தலைமைச் செயலகம் நோக்கி வந்தனா்.
அவா்களை கொசக்கடை வீதி, செஞ்சி சாலை சந்திப்பில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, சங்கத்தின் தலைவா் ஆா்.முருகானந்தம் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்பு சட்டப்படி நியாயவிலைக் கடை ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் சங்கச் செயலா் பி.பிரேம் ஆனந்த், இணைச் செயலா் என்.வினோத், பொருளாளா் பி.பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.