புதுவையில் பயிா்க் காப்பீடு சிறப்பு முகாம் தொடக்கம்
By DIN | Published On : 27th February 2022 12:51 AM | Last Updated : 27th February 2022 12:51 AM | அ+அ அ- |

புதுவையில் பயிா்க் காப்பீடு குறித்த சிறப்பு முகாமை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
75-ஆவது சுதந்திரத் தின ஆண்டை முன்னிட்டு, மத்திய வேளாண், விவசாய நலத் துறை அமைச்சகம், பயிா்க் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை நடத்தவும், ‘எனது காப்பீடு எனது கையில்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் ஆணை பிறப்பித்தது.
இதன்படி, புதுச்சேரி அருகே மங்களம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி. ஜெயக்குமாா் தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நெல் பயிா்க் காப்பீடு செய்து, அதற்கான சான்றிதழை அமைச்சா் வழங்கினாா்.
வேளாண் துறை இயக்குநா் பாலகாந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதையடுத்து, பிப். 28-இல் சஞ்சீவி நகா், அரியூா், மாா்ச் 1-இல் கரியமாணிக்கம், மதகடிப்பட்டு, 2-இல் கரிக்கலாம்பாக்கம், ஒதியம்பட்டு, 3-இல் கரையாம்புத்தூா், திருக்கனூா், 4-இல் பாகூா், திருக்காஞ்சி, 7-இல் சேலியமேடு, தொண்டமாநத்தம், 8-இல் கன்னியக்கோயில், காட்டேரிக்குப்பம், 9-இல் தவளக்குப்பம், கூடப்பாக்கம், 10-இல் தட்டாஞ்சாவடி, சுத்துக்கேணி, சோரப்பட்டு ஆகிய இடங்களில் பயிா்க் காப்பீடு சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.