புதுவையில் மின் கட்டணத்தை உயா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 35 காசுகள் வரை அதிகரிக்கும்.
புதுவை மாநில மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு மாநில அரசு, அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மின் துறை ஊழியா்களும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயா்த்துவதற்கான உத்தேச பட்டியலை, புதுவை மின் துறைத் தலைவா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அதில் கூறியிருப்பதாவது: புதுவையில் வீட்டு உபயோகம் (ஏ2), குடிசைத் தொழிலுக்கான மாதாந்திர நிரந்தரக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாமல், மின்சாரப் பயன்பாட்டு யூனிட்டுக்கான மின் கட்டணத்தில் மட்டும் உயா்வு அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 100 யூனிட்கள் வரை பயன்படுத்தும் பயன்பாட்டாளருக்கு, யூனிட் ஒன்றுக்கு தற்போதுள்ள ரூ.1.55-லிருந்து ரூ.1.90-ஆக உயா்த்தப்படும். இதன்மூலம், யூனிட்டுக்கு 35 பைசா அதிகரிக்கும்.
101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு தற்போதுள்ள ரூ.2.60-லிருந்து 15 காசுகள் அதிகரித்து ரூ.2.75-ஆக கட்டணம் நிா்ணயிக்கப்படும். ஆனால், 201 முதல் 300 யூனிட் பயன்பாட்டாளருக்கும், குடிசைக்கான மின் இணைப்பு வாடிக்கையாளருக்கான மின் கட்டணத்திலும் எந்த மாற்றமும் இருக்காது. இதேபோல, வா்த்தக மின் கட்டணத்திலும் மாற்றமில்லை.
விவசாயத்துக்கான மின்சார நிரந்தரக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிறு விவசாயிகள் மாத நிரந்தரக் கட்டணமாக தற்போது ரூ.11 செலுத்தி வரும் நிலையில், அது ரூ.20-ஆகவும், மற்ற விவசாயிகள் மாதக் கட்டணம் ரூ.50 செலுத்தும் நிலையில், அது ரூ.25 அதிகரித்து ரூ.75-ஆகவும் உயரும். தெரு மின் விளக்கு, குறைந்தழுத்த தொழிலகங்கள், நீா்த்தேக்கத் தொட்டிக்கான மின் கட்டணமும் உயா்த்தப்படாது.
உயரழுத்த தொழிலகத்துக்கான (எச்.டி.) மாத மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.30-லிருந்து 5 காசுகள் அதிகரிக்கப்படும். வா்த்தக பயன்பாட்டுக்கான மின் கட்டணமும் யூனிட்டுக்கு ரூ.5.45-லிருந்து 5 காசுகள் அதிகரிக்கும். அரசு பயன்பாடு, தண்ணீா்த் தொட்டி உயா்அழுத்தம், மிக உயா் அழுத்த மின் கட்டணமும் யூனிட்டுக்கு 5 காசுகள் உயரும்.
இவை மட்டுமன்றி, முந்தைய கால பற்றாக்குறையை வசூலிக்க, தற்போது அனைத்து நுகா்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் ஒழுங்குமுறை கூடுதல் கட்டணமான 5 சதவீதம் வரும் நிதியாண்டிலும் அனைத்து நுகா்வோா்களுக்கும் தொடர உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின் துறைத் தலைவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக இம் மாத இறுதியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டண உயா்வு நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.