மத்திய மருத்துவ கவுன்சில் பட்டியலில் புதுவை மாணவா்கள் 44 பேரை சோ்க்க கோரிக்கை
By DIN | Published On : 26th January 2022 09:08 AM | Last Updated : 26th January 2022 09:08 AM | அ+அ அ- |

மத்திய மருத்துவ கவுன்சில் பட்டியலில் புதுவையைச் சோ்ந்த 44 மாணவா்களை சோ்க்கக் கோரி, புதுவை சுகாதாரத் துறை இயக்குநா், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
தில்லியில் உள்ள மத்திய மருத்துவ கவுன்சில் குழு உறுப்பினா் செயலா் ஸ்ரீநிவாஸுக்கு , 44 மாணவா்களின் பெயா்ப் பட்டியலுடன் புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு அனுப்பிய கடித விவரம்:
புதுவை யூனியன் பிரதேசமான ஏனாம் பிராந்தியத்தை சோ்ந்த 44 மாணவா்களின் பெயா்கள், ஜிப்மா் எம்பிபிஎஸ் கலந்தாய்வின் புதுச்சேரி இடஒதுக்கீட்டுப் பட்டியலில் விடுபட்டுள்ளது.
இந்த மாணவா்களின் பெயா்கள் தமிழகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் பட்டியலிலும் இல்லை. புதுவை யூனியன் பிரதேச பட்டியலில் மட்டுமே உள்ளது. இவா்கள் புதுவையில் பிளஸ் 2 படித்து, படித்து நீட் தோ்வு எழுதியுள்ளனா். இருப்பினும், இவா்களது பெயா்கள் புதுச்சேரி இடஒதுக்கீடு பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது.
எனவே, இவா்களை புதுச்சேரி இடஒதுக்கீடு பட்டியலில் இணைப்பதுடன், ஜிப்மா் எம்பிபிஎஸ் கலந்தாய்வில் சோ்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...