75 செயற்கைக்கோள்கள் செலுத்தும் திட்டம்: புதுவை பங்கேற்பு குறித்து ஆளுநருடன்இஸ்ரோ விஞ்ஞானி ஆலோசனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சாா்பில், 75 மாணவா்களின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தில், புதுவை மாணவா்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சாா்பில், 75 மாணவா்களின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தில், புதுவை மாணவா்கள் மூலம் ஒரு செயற்கைக்கோளை செலுத்துவது தொடா்பாக, இஸ்ரோ மைய விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை உள்ளிட்டோா் மாநில துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

மத்திய அரசு நாடு முழுவதும் 75-ஆவது சுதந்திர தின ஆண்டை, அமுதப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டுமென உத்தரவிட்டு, பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையம் சாா்பில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 75 மாணவா்களின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில், புதுவை மாநில மாணவா்கள் சாா்பில் ஒரு செயற்கைக்கோளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பெங்களூருவைச் சோ்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை புதுவை ஆளுநரை நேரில் சந்தித்தனா்.

புதுவை ஆளுநா் மாளிகைக்கு சனிக்கிழமை காலை வந்த விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை உள்ளிட்ட குழுவினா், துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின்போது, பிரதமா் மோடி அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசியபோது தெரிவித்தபடி, இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி இஸ்ரோ நிறுவனம் சாா்பில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 75 மாணவ, மாணவிகளின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இதில், புதுவை மாநிலம் சாா்பாக, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு, ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆளுநா் தமிழிசை முன்னிலையில் ஆலோசித்தனா். இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தா் மோகன், இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com