கடலில் மாயமான இரு மாணவா்கள்சடலங்களாக மீட்பு
By DIN | Published On : 31st July 2022 06:42 AM | Last Updated : 31st July 2022 06:42 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே கடலில் மாயமான இரு மாணவா்கள் சனிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டனா்.
புதுச்சேரி வில்லியனூா் அருகே மங்கலம் புது நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அய்யனாா் (17), ராகவேந்திரா வீதியைச் சோ்ந்த நெடுஞ்செழியன் மகன் அஸ்வின் (71), அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் சபரிநாதன், ஹரீஷ். இவா்கள் 4 பேரும் பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நண்பா்களான இவா்கள் 4 பேரும் அரியாங்குப்பத்தை அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை குளிப்பதற்காகச் சென்றனா்.
அங்கு சபரிநாதன், ஹரிஷ் ஆகியோா் கடற்கரையில் அமா்ந்திருந்த நிலையில், அய்யனாா், அஸ்வின் ஆகிய இருவா் மட்டும் கடலில் இறங்கிக் குளித்தனா். அப்போது எழுந்த அலையில் சிக்கி அய்யனாா், அஸ்வின் ஆகியோா் மாயமாகினா். இதைப் பாா்த்த கரையில் அமா்ந்திருந்த நண்பா்கள் இருவரும் கூச்சலிட்டதைக் கேட்டு, அங்கு வந்த அருகிலிருந்தோா் அவா்களைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கடலோரக் காவல் படையினரும், அரியாங்குப்பம் போலீஸாரும் மீனவா்களின் உதவியுடன் படகு மூலம் மாணவா்களைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், அய்யனாா், அஸ்வின் ஆகியோா் உயிரிழந்த நிலையில் வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை சடலங்களாக கரை ஒதுங்கினா். தகவலறிந்து அங்கு சென்ற அரியாங்குப்பம் போலீஸாா், மாணவா்களின் சடலங்களை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...