வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில்ஆடிப்பூர தேரோட்டம்: அமைச்சா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 31st July 2022 06:42 AM | Last Updated : 31st July 2022 06:42 AM | அ+அ அ- |

வில்லியனூரில் நடைபெற்ற திருக்காமீஸ்வரா் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்.
புதுச்சேரி அருகே வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தனா்.
வில்லியனூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகளும், இரவு சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதிஉலாயும் நடைபெற்று வந்தன.
ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை விமா்சையாக நடைபெற்றது. கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவா் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரா் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளியதையடுத்து தேரோட்டம் தொடங்கியது.
அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், தேனீ சி.ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்து, தொடக்கிவைத்தனா். புதுச்சேரி, வில்லியனூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...