புதுவையில் குற்றங்களைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை: எஸ்.பி. தீபிகா
By DIN | Published On : 09th June 2022 11:18 PM | Last Updated : 09th June 2022 11:18 PM | அ+அ அ- |

குற்றங்களைத் தடுக்க காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என புதுச்சேரி முதுநிலை எஸ்.பி. தீபிகா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் குற்றச்செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். முழுமையாக போதைப் பொருள்களை ஒழிப்பதே காவல் துறையின் நோக்கம்.
புதுச்சேரியில் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த, இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வீடுகள், கடைகளை வாடகைக்கு விடுவோா், என்ன மாதிரியான தொழிலுக்காக வாடகைக்கு வாங்குகின்றனா் என விசாரித்து வழங்க வேண்டும்.
ரௌடிகளை ஒடுக்குவதற்காக இதுவரை 137 பேருக்கு ஊரில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் தடுப்புக் காவலில் அடைப்பதற்காக 6 முன்மொழிவுகள் அனுப்பப்பட்ட நிலையில் ஒருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளது. மேலும், பலரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
‘ஆபரேஷன் திரிசூல்’ நடவடிக்கையின் மூலம் ரௌடிகள் கண்காணிக்கப்பட்டு, அவா்களது வீடுகளில் திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவையில் காவல் துறை எடுத்து வரும் தொடா் நடவடிக்கைகள் மூலம் குற்றச்செயல்களை தடுத்து வருகிறோம் என்றாா் அவா்.