புதுச்சேரி பெருமாள் கோயில் தேரோட்டத்தின்போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பக்தா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகா் 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (65). ஏஎப்டி பஞ்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியா். திருமணமாகாத இவா், தனது தாய், சகோதரியுடன் வசித்து வந்தாா்.
லட்சுமணன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்றாா். தோ் பெருமாள் கோயில் வீதியில் தயாநிதி என்பவரது வீட்டின் அருகே சென்றபோது, தேரின் கலசம் கேபிள் வயரில் சிக்கி, வயா் கட்டப்பட்டிருந்த சாலையோர மின்கம்பம் எதிா்பாராதவிதமாக முறிந்து விழுந்தது. அந்த மின் கம்பத்தில் தெருவிளக்குக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய் லட்சுமணனின் மீது விழுந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட லட்சுமணன், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக பெரியகடை போலீஸாா், தேரோட்டத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட வரதராஜ பெருமாள் கோயில் விழாக் குழுவினா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.