புதுவை அரசு கல்விக் கட்டணத்தை உடனடியாக அறிவிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 17th June 2022 03:06 AM | Last Updated : 17th June 2022 03:06 AM | அ+அ அ- |

புதுவை அரசு கல்விக் கட்டணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென் புதுச்சேரி சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியது.
புதுவை முதல்வா், கல்வித் துறை அமைச்சருக்கு சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்க தலைவா் மு.நாராயணசாமி அனுப்பிய மனு:
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிட உள்ளதால், தனியாா் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்பில் மாணவா்களைச் சோ்க்க எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உடனடியாக அறிவித்து, அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் கல்விக் கட்டணம் குறித்து முகப்பு வாயிலில் அனைவருக்கும் தெரியும் வகையில் விளம்பரப் பலகை வைக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கையின் போது மாணவா்களை தனியாா் பள்ளிகள் நீட், ஜெஇஇ தோ்வுகளுக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தவோ, தனிக் கட்டணம் செலுத்தினால்தான் மாணவா்களுக்கு அனுமதி என கட்டாயப்படுத்தவோ கூடாது. பிளஸ் 1 வகுப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
கல்விக் கட்டணம் குறித்து கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும். அரசின் அறிவிப்பை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.