புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம், அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த சிறு வியாபாரிகள், போலீஸாா் நல்லுறவு கூட்டம் காவல் நிலைய வளாகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிழக்கு எஸ்.பி. வம்சித ரெட்டி தலைமை வகித்தாா். ஆய்வாளா் பாபுஜி, உதவி ஆய்வாளா் சந்திரசேகா் மற்றும் போலீஸாா், 30-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கலந்து கொண்டனா்.
புதிய பேருந்து நிலையம் உள்ளேயும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் பாலியல் தொழில் செய்வோா் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ரௌடிகள் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுவது தடுக்கப்படும். கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் குற்றங்களை கண்டறிய எளிதாக இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதைக் கேட்ட வியாபாரிகள், தங்களது குறைகளை எடுத்துக் கூறி காவலா் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனா்.