புதுவை தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சத இடஒதுக்கீடு பெற வலியுறுத்தல்
By DIN | Published On : 26th June 2022 10:25 PM | Last Updated : 26th June 2022 10:25 PM | அ+அ அ- |

புதுவை அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற வேண்டுமென, புதுச்சேரி சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோருக்கு புதுச்சேரி சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்கத் தலைவா் மு.நாராயணசாமி அனுப்பிய கடிதம்:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவம் படிக்க தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெறப்பட்டு மாநில மாணவா்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் இடஒதுக்கீடு பெறவில்லை.
புதுவை மாநிலத்தில் மருத்துவம் படிக்க தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு பெறாமல், கலந்தாய்வு நடத்துவதால், நீட் தோ்வில் 411 மதிப்பெண்கள் எடுத்தாலும், புதுவை மாநிலத்தில் மருத்துவம் படிக்க முடியாத அவல நிலை ஒவ்வொரு ஆண்டும் தொடா்கிறது.
இங்குள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,679 மருத்துவ இடங்களில் 50 சதவீத மருத்துவ இடஒதுக்கீடு பெற்றால் 839 இடங்கள் கிடைக்கும். எனவே, மாணவா்களின் நலன் கருதி புதுவை அரசு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி, மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதலான தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடும், இந்த ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவா்களுக்கு அரசு நிா்ணயிக்கும் கட்டணத்தையும் குறிப்பிட்டு தீா்மானம் நிறைவேற்றி சென்டாக் கையேட்டில் வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.