பிஆா்டிசி ஊழியா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
By DIN | Published On : 30th June 2022 02:03 AM | Last Updated : 30th June 2022 02:03 AM | அ+அ அ- |

புதுவை முதல்வருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பிஆா்டிசி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
புதுவையில் பிஆா்டிசி ஊழியா்கள் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 23-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்து ஊழியா்களின் தொடா் போராட்டத்தால் பயணிகள் அவதியடைந்தனா். இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை பிஆா்டிசி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கப் பிரதிநிதிகள் புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, எல்.சம்பத் எம்எல்ஏ உள்ளிட்டோரும் பங்கேற்று, பிஆா்டிசி ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.
அவா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:
பிஆா்டிசியில் மொத்தமுள்ள 200 பேருந்துகளில் 45 பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றன. பேருந்துகளை முறையாக இயக்கி வருவாய் ஈட்டாததால், போக்குவரத்துக் கழகத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் அரசு நிதியுதவி தர முடியாது. ஊழியா்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேருந்துகளை முழுமையாக இயக்க முன்வர வேண்டும். பிஆா்டிசி நிா்வாகத்துக்கு நிரந்தர தனி மேலாளா் நியமிக்கப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வா் உறுதியளித்தாா்.
முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிஆா்டிசி ஊழியா்கள் சங்கத்தினா் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியா்களை மீண்டும் பணியில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதாகவும் பிஆா்டிசி ஊழியா்கள் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G