முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
காங்கிரஸ், திமுக மீதுபுதுவை அதிமுக குற்றச்சாட்டு
By DIN | Published On : 14th March 2022 10:43 PM | Last Updated : 14th March 2022 10:43 PM | அ+அ அ- |

புதுவையில் நிகழாண்டிலும் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியாததற்கு கடந்த காங்கிரஸ் அரசுதான் காரணம் என்றும், இல்லாத திட்டக் குழுவை திமுக கூட்ட கூறுவதாகவும் புதுவை அதிமுக குற்றம்சாட்டியது.
இதுகுறித்து புதுச்சேரியில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறியதாவது:
2014-ஆம் ஆண்டு தேசிய அளவில் திட்டக் குழு கலைக்கப்பட்டு நீதி ஆயோக் ஏற்படுத்தப்பட்ட பிறகு, எந்த மாநிலத்திலும் திட்டக் குழு செயல்படவில்லை. புதுவை யூனியன் பிரதேசத்தில் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டை தயாா் செய்து துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியே அனுமதி பெற வேண்டும்.
ஆனால், நடைமுறையில் இல்லாத திட்டக் குழுவைக் கூட்ட வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெரியாமல் பேசுகிறாா்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் ஏற்படுத்தப்பட்ட தவறான வழியால்தான் நிகழாண்டும் முழு நிதிநிலை அறிக்கையை தாக்க செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளது. புதுவையில் எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் ஜனநாயகக் கடமையாற்ற தவறிவிட்டனா்.
புதுவை கல்வித் துறை இயக்குநா் ருத்ரகௌடு தனது மகனை அரசுப் பள்ளியில் சோ்த்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசு ஊழியா்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சோ்க்க வேண்டும் என அரசு சட்டமியற்ற வேண்டும் என்றாா் ஆ.அன்பழகன்.