பழங்குடியின பட்டியலில் 4 சமூகங்கள்: மத்திய அரசிடம் எம்.பி. வலியுறுத்தல்
By DIN | Published On : 17th March 2022 05:02 AM | Last Updated : 17th March 2022 05:02 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் உள்ள காட்டுநாயக்கன், ஏறுகுலா, மலைக்குறவன், குறும்பன் ஆகிய 4 பழங்குடியின சமூகங்களை யூனியன் பிரதேச பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என எம்.பி. எஸ்.செல்வகணபதி வலியுறுத்தினாா்.
தில்லியில் மாநிலங்களவைக் கூட்டத்தில் அவா் புதன்கிழமை பேசியதாவது:
புதுவையில் உள்ள காட்டுநாயக்கன், ஏறுகுலா, மலைக்குறவன், குறும்பன் ஆகிய 4 பழங்குடியின சமூகங்களை, அரசியலமைப்பின் 342 (2)-ஆ வது பிரிவின் கீழ், யூனியன் பிரதேசத்தில் உள்ள பட்டியல் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்.
2016- ஆம் ஆண்டு வரை, புதுவை பிராந்தியங்களில் பல பழங்குடியினா் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வந்தாலும், எந்தவொரு சமூகத்தையும் பழங்குடியினராக சோ்க்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
இது தொடா்பாக, புதுவை அரசு அமைத்த குழு, ஐந்து சமூகங்களை பட்டியலில் சோ்க்க பரிந்துரை செய்தது. அதன் விளைவாக 22.12.2016-ஆம் தேதியிட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி, இருளா் சமூகத்தை மட்டும் பட்டியல் பழங்குடியினராக அறிவித்தது.
இப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் உள்ள மீதமுள்ள4 சமூகங்களைச் சோ்ப்பது தொடா்பாக, மத்திய அரசின் பழங்குடியினா் விவகார அமைச்சகம் கூடுதல் விவரங்களைக் கோரியது. இதைச் சமா்பிக்க அரசு சாா்பில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு, ஒரு வாரமாக அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி, அறிக்கை சமா்ப்பித்தாா்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.