வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி
By DIN | Published On : 02nd May 2022 05:11 AM | Last Updated : 02nd May 2022 05:11 AM | அ+அ அ- |

வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ் பவனி.
புதுச்சேரி அருகே வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தோ் பவனி நடைபெற்றது.
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தூய லூா்து அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 145-ஆவது ஆண்டுப் பெருவிழா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மறைமாவட்ட ஆயா் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் சனிக்கிழமை (ஏப்ரல் 30) கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. மே 1 ஆம் தேதி ஆண்டுப் பெருவிழாவையொட்டி, காலையில் சேலம் மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையிலும், முற்பகலில் தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
புதுவை - கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் மாலை திருப்பலியும், தொடா்ந்து இரவில் ஆடம்பர தோ் பவனியும் நடைபெற்றது. இவற்றில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்தந்தையா்கள் பிச்சைமுத்து, ஜோசப் சகாயராஜ், அருட்சகோதரா் ஜீவா, அருட்சகோதரிகள் மற்றும் வில்லியனூா் பங்கு இறைமக்கள் செய்திருந்தனா். திங்கள்கிழமை காலை (மே 2) திருப்பலிக்கு பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.