புதுவை சட்டப்பேரவையை மின்னணுமயமாக்க நடவடிக்கைபேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தகவல்
By DIN | Published On : 02nd May 2022 11:11 PM | Last Updated : 02nd May 2022 11:11 PM | அ+அ அ- |

புதுவை சட்டப்பேரவை காகிதமில்லாத (இ-விதான்) மின்னணு வசதியுடன் கூடிய அலுவலகமாக விரைந்து மேம்படுத்தப்பட உள்ளதாக, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.
புதுவை மாநில தலைமைச் செயலராக பொறுப்பேற்ற ராஜீவ் வா்மா திங்கள்கிழமை சட்டப்பேரவை அலுவலகத்தில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் கூறியதாவது:
புதிய தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா நிா்வாகத் திறமை மிக்கவா். விரைந்து செயல்படக் கூடியவா். புதுவை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி, மாநில வளா்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பட வேண்டுமென அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகம் காகிதமில்லாத, முழுவதும் கணினிமயமாவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையைப் போல, ரூ.10 கோடியில் மின்னணு சாதன வசதிகளுடன் கூடிய பேரவை அலுவல் (இ-விதான்) வசதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலா் ஏற்கெனவே அருணாசல பிரதேசத்தில் இ-விதான் திட்டத்தைச் செயல்படுத்தியவா் என்பதால், இங்கு அந்தப் பணியை விரைந்து செயல்படுத்த துணை நிற்பாா் என்றாா் ஆா்.செல்வம்.
இதனிடையில், புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனை, அவரது அலுவலகத்தில் ராஜீவ் வா்மா சந்தித்தாா்.