புதுவையில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சி: தமிழிசை சௌந்தரராஜன்
By DIN | Published On : 19th October 2022 02:51 AM | Last Updated : 19th October 2022 02:51 AM | அ+அ அ- |

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில், முதியோா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன். உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.
புதுவையில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் பவ்டா அமைப்பு சாா்பில், 80 வயதுக்குள் மேற்பட்ட முதியோா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதியோா்களுக்கு நலத் திட்ட உதவிகளை துணைநிலை ஆளுநா் வழங்கிப் பேசினாா்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வாழ்த்திப் பேசினாா். வங்கி அதிகாரிகள் வெங்கடாசலம், ஆ.சதீஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பவ்டா நிறுவனா் சி.ஜோஸ்லின் தம்பி வரவேற்றாா். நாஞ்சில் கி.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.
விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். முழுமையான தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டு வரமுடியாவிட்டாலும், இப்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடங்கள் இருக்கும். விருப்பமுள்ளவா்கள் தமிழில் படிப்பதற்காக புத்தகங்களை தயாரிக்கக் குழு அமைக்கப்படும். அவை 6 மாதங்களுக்குள் தயாராக நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. தொழில் கல்வியைக் கூட தாய்மொழியில் படிக்க ஏற்பாடு செய்ய கூறினாா்கள்.
புதுச்சேரிக்கு தினமும்1.05 லட்சம் லிட்டா் பால் தேவைப்படுகிறது. அதில் தற்போது 25 ஆயிரம் லிட்டா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கா்நாடகத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் மழை, விழாக்களால் தடைபட்டுள்ளது. பால் பற்றாக்குறையைப் போக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலரிடம் கூறியுள்ளேன் என்றாா் அவா்.