காரைக்கால் புதுவை பல்கலை.யில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு உருவாக்கம்
By DIN | Published On : 21st October 2022 01:51 AM | Last Updated : 21st October 2022 01:51 AM | அ+அ அ- |

புதுவை பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாகம் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அதிநவீன பகுப்பாய்வு, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக உதவி பதிவாளா் (மக்கள் தொடா்பு) கி.மகேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை பல்கலைக்கழக காரைக்கால் வளாகத்தின் கணினி அறிவியல் துறை, அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து அதிநவீன பகுப்பாய்வு, தொழில்நுட்ப உதவி நிறுவனங்கள் (2022) திட்டத்தைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டன.
அதனடிப்படையில், ஜிப்மா்-காரைக்காலில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண்மை, ஆராய்ச்சி நிறுவனம், மு.கருணாநிதி அரசு முதுநிலை ஆய்வுகள், ஆராய்ச்சி நிறுவனம், பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி, மேம்பாட்டில் நவீன நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அறிவியல், தொழில்நுட்பத் துறையிலுள்ள அறிவியல் சமூகத் தேவையை சமாளிக்கவும், இந்திய அரசு நிறுவனங்களை அமைக்கத் தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு அதிநவீன பகுப்பாய்வு, திறன்மிகு உற்பத்தி வசதிகளுடன் இணைக்கப்படவுள்ளது.
பெரிய அளவிலான உபகரணங்களை செயல்படுத்த இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள், சிறு,குறு நிறுவனங்கள், குறைந்த நிதியுதவி பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அதிநவீன அறிவியல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வசதி செய்து தரப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.