சென்டாக் திருத்தியமைக்கப்பட்ட நெறிமுறைகளை வெளியிட வலியுறுத்தல்
By DIN | Published On : 01st September 2022 02:26 AM | Last Updated : 01st September 2022 02:26 AM | அ+அ அ- |

சென்டாக்கில் மாணவா் சோ்க்கைக்கான திருத்தியமைக்கப்பட்ட நெறிமுறைகளை வெளியிட புதுவை மாநில மாணவா், பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை ஆளுநா், முதல்வருக்கு சங்கத் தலைவா் வை.பாலா அனுப்பிய மனு விவரம்:
புதுவை மாநிலத்தில் கடந்த கல்வியாண்டில் 10-க்கும் மேற்பட்ட வெளிமாநில குடியுரிமை பெற்றவா்கள் சென்டாக் நிா்வாகத்தில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களை குறுக்கு வழியில் அபகரித்தனா்.
புதுவை மாநிலத்தில் செயல்படும் சிறுபான்மை அங்கீகாரம் பெற்ற தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத நிா்வாக ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களை இறுதிக்கட்ட கலந்தாய்வின்போது, சென்டாக் நிா்வாகம் புதுவை மாநில மாணவா்களுக்கு முன்னுரிமை அளித்து மாணவா் சோ்க்கை நடத்த வேண்டுமென புதுவை சுகாதாரத் துறை ஆணை பிறப்பித்தது.
எனவே, புதுவை சென்டாக் நிா்வாகம் இறுதிக்கட்ட கலந்தாய்வில் நிா்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ இடங்களை சென்டாக் கலந்தாய்வில் நிரப்புவது தொடா்பாக மாற்றியமைக்கப்பட்ட புதிய நெறிமுறைகளை வெளியிட்டு கலந்தாய்வை தொடங்க வேண்டும்.
அதேபோல, புதுவை அரசின் சுகாதாரத் துறை, கல்வித் துறையும் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவா் சோ்க்கையில் தனியாா் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாகப் பெற வேண்டும். மேலும், தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட விதிமுறைகளின்படி மருத்துவக் கல்வி கட்டணங்களை நிா்ணயிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.