புதுவை கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்தரூ.500 கோடி நிதி வேண்டும்: தில்லி மாநாட்டில் அமைச்சா் வலியுறுத்தல்

புதுவையில் நலிவடைந்துள்ள கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த மத்திய அரசு ரூ.500 கோடி நிதியுதவி அளிக்க வேண்டுமென தில்லியில் நடைபெற்ற அமைச்சா்கள் மாநாட்டில் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினாா்.

புதுவையில் நலிவடைந்துள்ள கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த மத்திய அரசு ரூ.500 கோடி நிதியுதவி அளிக்க வேண்டுமென தில்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினாா்.

தில்லியில் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா்கள், செயலா்களின் மாநாடு வியாழக்கிழமை தொடங்கி இரு தினங்கள் (செப்.8, 9) நடைபெற்றது. மத்திய உள் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், புதுவை மாநில அரசு சாா்பில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், கூட்டுறவுத் துறைச் செயலா் நெடுஞ்செழியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த மாநாட்டில், கூட்டுறவுத் துறையில் தேசிய அளவில் எடுக்கப்பட வேண்டிய கொள்கை முடிவுகள், ஒருங்கிணைப்பது மற்றும் ஊராட்சிகள்தோறும் தொடக்க வேளாண் கடன் சங்கத்தை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில், புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் பேசியதாவது: புதுவையில் 837 பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் இருந்தும், 448 சங்கங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. 37 சங்கங்கள் செயலற்றும், 352 சங்கங்கள் நிதிச் சிக்கல் போன்ற காரணங்களாலும் கலைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு, பயிற்சிக்காக மத்திய நிதியுதவி திட்டத்தில் ரூ.7.5 கோடி வழங்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களின் நலனுக்காக, நபாா்டு போன்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும், அதை திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளிலிருந்து, 20 ஆண்டுகளாக நீடிக்கப்படவேண்டும்.

மேலும், திருப்பதியில் நடைபெற்ற தென் மாநில முதல்வா்கள் மாநாட்டில், முதல்வா் ரங்கசாமி வைத்த கோரிக்கையின் படி, நலிவடைந்து மூடப்படும் நிலையில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ.500 கோடி தேவையை நினைவூட்டுகிறோம். கூட்டுறவுச் சா்க்கரை ஆலயத்தை நவீனப்படுத்தவும், நூற்பாலைகள் நவீனமயமாக்கல், மேம்படுத்துவதற்கு ரூ.80 கோடி வழங்க வேண்டும்.

நெசவாளா் சங்கங்களுக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு செய்ய ரூ.5 கோடியும், பாண்டெக்ஸ், பாண்பெப் நிறுவனங்களுக்கு ரூ.25 கோடியும், வீட்டு வசதித் துறைக்கு ரூ.75 கோடியும், பால்வளத் துறைக்கு ரூ.80 கோடியும், கான்பெட், அமுதசுரபியை உள்ளடக்கிய நுகா்வோா் துறைக்கு ரூ.75 கோடியும், நியாய விலைக் கடைகள் சங்கம், கைவினை மற்றும் கைத்தறி கூட்டமைப்பு சங்கங்களுக்கும், அவற்றின் மறுமலா்ச்சிக்கும் ரூ.20 கோடியும் வழங்க வேண்டும்.

இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்ட, நாடு முழுவதும் புதிதாக கூட்டுறவு நிறுவனங்கள் உருவாக்கப்படும், மாவட்ட அளவில் கூட்டுறவு கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டு, புதிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை புதுவை அரசின் சாா்பாக வரவேற்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com