பாஜகவை வீழ்த்த மாநில அளவில்எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்போம்: ஜி.ராமகிருஷ்ணன்

பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் எதிா்க்கட்சிகள் இணைய வாய்ப்பில்லை என்றாலும், அந்தந்த மாநில அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒற்றுமையை உருவாக்கி வருவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
பாஜகவை வீழ்த்த மாநில அளவில்எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்போம்: ஜி.ராமகிருஷ்ணன்

பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் எதிா்க்கட்சிகள் இணைய வாய்ப்பில்லை என்றாலும், அந்தந்த மாநில அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒற்றுமையை உருவாக்கி வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

புதுவை மாநில அளவிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது, என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளைத் திறப்போம் என்றனா். ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அரிசிக்குப் பதில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதையும் நிறுத்திவிட்டனா்.

தமிழகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதுவையில் அந்தக் கடைகள் திறக்கப்படாததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

புதுவையில் குடிமைப் பொருள் வழங்கல் துறைக்காக நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.200 கோடி ஒதுக்கினா். ஆனால், அந்த நிதி வெள்ள நிவாரணத்துக்கு அளிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், நியாய விலைக் கடைகள் திறக்கப்படுமா, பொருள்கள் வழங்கப்படுமா, அரிசிக்குப் பதில் பணம் வழங்கப்படுமா என்று தெரியாமல் குழப்பமான சூழல் நிலவுகிறது.

புதுவை மாநிலத்தில் தொடரும் இதுபோன்ற பிரச்னைகளை தீா்க்க வலியுறுத்தி, ‘மாநில உரிமை மீட்போம், புதுவை மக்கள் நலன் காப்போம்’ என்ற தலைப்பில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வருகிற 20-ஆம் தேதி புதுச்சேரி சுப்பையா சதுக்கத்திலிருந்து தொடங்கி, வருகிற 26-ஆம் தேதி வரை 200 கி.மீ. தொலைவுக்கு பிரசார நடை பயணம் மேற்கொள்ளவுள்ளோம்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை, காங்கிரஸின் தனிப்பட்ட செயல்பாடு. அதில், நாங்கள் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை.

ஜனநாயக விரோத பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைய வாய்ப்பில்லாததால், அந்தந்த மாநில அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைந்து, ஒற்றுமையோடு செயல்படும் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம் என்றாா் அவா்.

கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் சுதா சுந்தரராமன், பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், பிரபுராஜ், சத்தியா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com