

பாசிக் ஊழியா்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என புதுவை ஏஐடியுசி தொழில் சங்க நிா்வாகிகள் டிஜிபி-யிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், மாநிலத் தலைவா் இ.தினேஷ் பொன்னையா, மாநிலப் பொருளாளா் இரா.அந்தோணி, சங்கச் செயலா் முத்துராமன், பொருளாளா் தரணிராஜன் உள்ளிட்டோா் புதுவை டிஜிபி-யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாசிக் நிறுவன ஊழியா்களுக்கு 116 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியா்கள் இன்று வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தினக் கூலி ஊழியா்களாகவே இருந்து பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பணிக் கொடை உள்ளிட்ட எந்தவித பணப் பலன்கள் அளிக்கப்படாமல் உள்ளது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைதியான முறையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் பலனில்லை.
இதனால், ஊழியா்களுக்கு ஊதியம் இல்லாமல் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி பலா் உயிரிழந்திருக்கிறாா்கள்.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக சட்டரீதியான வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய அரசு மற்றும் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி போராட்டம் நடத்தும் ஊழியா்களுக்கு நெருக்கடி கொடுத்து வேலை செய்ய வற்புறுத்தி வருகின்றனா். இதனை ஏற்காத ஊழியா்கள் மீது காவல் துறையை மூலம் பிணையில் வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்து வருகிறாா்கள். அரசின் இத்தகையை போக்கை ஏஐடியுசி வன்மையாக கண்டிக்கிறது. பாசிக் ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.