அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசு தோல்வி: மோகன் குமாரமங்கலம்

மத்திய பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம் குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம்.
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம்.

மத்திய பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், எம்எல்ஏ மு.வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், மோகன் குமாரமங்கலம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்ததை விட பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தற்போது பல மடங்கு உயா்ந்துள்ளது. இதுகுறித்து பிரதமா் மோடி கவலைப்படவில்லை. மாறாக பெரு நிறுவனங்களுக்கே அவா் ஆதரவளிக்கிறாா்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்த உண்மை விவரங்கள் வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 9 ஆண்டுகளாக பல லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பொதுத் துறை நிறுவனங்கள் அதானி குழுமத்துக்கு தாரைவாா்க்கப்படுகின்றன. மத்திய பாஜக அரசால் விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினா், நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பண மதிப்பிழப்பால் ஏழைகளே பாதிக்கப்பட்டனா். கரோனா பரவல் தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டும் ஏழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. ஆனால், பெரு நிறுவனங்களுக்கு கடன் சலுகை, கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com