புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பிரிவின் கிழக்கு, வடக்குக் காவல் கண்காணிப்பாளா் க.மாறன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்த இடமின்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிா்க்கும் வகையில் உள்துறை அமைச்சா், சுற்றுலாத்துறை அமைச்சா் ஆகியோரிடம் காவல்துறை சாா்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அமைச்சா்களின் அறிவுறுத்தல்படி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு உதவும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காரில் வருவோா் புதுச்சேரி சுற்றுலாத் துறை இணையம், போக்குவரத்து பிரிவு இணையம் மற்றும் கட்செவியஞ்சலில் அச்செயலியை பதிவிறக்கம் செய்தால், வாகன நிறுத்துமிடத்தை தெரிந்து பயன் பெறலாம்.
புதுச்சேரி பழைய துறைமுகப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டு, வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதைத் தவிா்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.