புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா் என மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் தெரிவித்தாா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய அரசின் வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் குடிநீா், சுகாதாரத் துறை ஆண்டுதோறும் செப்டம்பா் 15 ஆம் தேதி முதல் அக்டோபா் 2 ஆம் தேதி வரையில் ‘தூய்மையே சேவை’ எனும் பொருளில் இருவாரம் தூய்மைப் பணியை செயல்படுத்தி வருகிறது.
புதுச்சேரி உள்ளிட்ட 5 நகராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் நடைபெறவுள்ளன. அதில், 15,000 தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். குறிப்பிட்ட இடத்தில் முதல்வா், அமைச்சா்கள் தூய்மைப் பணியில் ஈடுபடவுள்ளனா். இதற்காக வெள்ளிக்கிழமை அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புதுச்சேரியில் கழிவு நீா் கடலில் கலப்பதைத் தடுக்க பொதுப் பணித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உழவா்கரை போன்ற நகராட்சிகளில் காலிமனைகளில் அதிக குப்பைகள் சேருகின்றன. இட உரிமையாளா்கள் அடையாளம் காணப்பட்டு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பவுள்ளோம். அதன்படி, 1000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளோம் என்றாா் ஆட்சியா்.
தாகைகள் வெளியீடு: ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமி அதற்கான பதாகையை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா பதாகையை வெளியிட்டாா். இதில் ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.