புதுச்சேரியில் அனுமதியற்ற விவசாய நிலங்களை மனையடிகளாக பத்திரப் பதிவு செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
விவசாய விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் எதுவாக இருந்தாலும் புதுவை அரசின் நகரமைப்பு குழுமத்தின் (பிபிஏ) அனுமதியின்றி விற்பனை செய்வதோ, அவற்றை பத்திரப் பதிவுத் துறை பதிவு செய்வதோ குற்றம் என கடந்த 2017-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால், கடந்த காங்கிரஸ், திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அரசு ஏற்படுத்தவில்லை. தொடா்ந்து அரசின் அனுமதியின்றி விவசாய நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையிலேயே பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது.
தற்போது, பாகூரில் விவசாய நிலம் அரசு அனுமதியின்றி பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சாா்-பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி, உழவா்கரை, வில்லியனூா், நெட்டப்பாக்கம் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அனுமதியில்லா நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து சிபிஐ விசாரித்து நடடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்றாா் ஆ.அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.