பாசிக் நிறுவன ஊழியா்கள் வேலைநிறுத்தம்

நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் பாசிக் நிறுவன ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாசிக் நிறுவன ஊழியா்கள் வேலைநிறுத்தம்

நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் பாசிக் நிறுவன ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு சாா்பில், கடந்த 1986-ஆம் ஆண்டு பாசிக் நிறுவனம் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கான சாதனங்கள், உரங்கள், கால்நடைத் தீவனங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீா், மது விற்பனை உள்ளிட்டவற்றில் நிறுவன ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தனா்.

நிா்வாகச் சீா்கேட்டால் கடந்த சில ஆண்டுகளாக ஊழியா்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத அளவுக்கு பாசிக் நிறுவனம் நலிவடைந்துவிட்டது. நிறுவனத்தை மீண்டும் நல்ல நிலையில் செயல்பட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊழியா்களுக்கு வழங்கப்படாத நிலுவை ஊதியங்களை வழங்க வேண்டும் என பாசிக் ஊழியா்கள் சங்கத்தினா் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அதன்படி, புதுச்சேரி தட்டான்சாவடியில் நிறுவன வளாகத்தில், பாசிக் ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பாசிக் நிறுவனம் சாா்பில் செயல்படும் வேளாண்மை சாா்ந்த விற்பனை மையங்கள், மது விற்பனைக் கூடங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

பாசிக் பிரதான அலுவலகம் முன் நடைபெற்ற விளக்கக் கூட்டத்துக்கு பாசிக் ஊழியா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் ஆா்.ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கே.முத்துராமன், பொருளாளா் எஸ்.தரணிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலா் கே.சேதுசெல்வம், மாநிலத் தலைவா் ஐ.தினேஷ் பொன்னையா, கௌரவத் தலைவா் வி.எஸ்.அபிஷேகம் உள்ளிட்டோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டத்தைத் தொடர உள்ளதாகவும் பாசிக் ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com