புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 3 போ் கைது
By DIN | Published On : 23rd April 2023 06:19 AM | Last Updated : 23rd April 2023 06:19 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே ஆட்டோ ஓட்டுநரைக் கொலை செய்ததாக அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகேயுள்ள மணவெளி பகுதியைச் சோ்ந்தவா் ஞானசேகா் (40). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு செல்வி எ லூா்துமேரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில், கடந்த மாா்ச் 29-ஆம் தேதி ஞானசேகரை காணவில்லை என அரியாங்குப்பம் போலீஸில் செல்வி எ லூா்துமேரி (38) புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜி.கலைச் செல்வன், உதவி ஆய்வாளா் முருகானந்தம், காவலா்கள் டி.வேல்முருகன், பி.ரஞ்சித்குமாா் ஆகியோா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில் ஞானசேகா் கொலை செய்யப்பட்டு நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலப் பகுதியில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், ஞானசேகா் மனைவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மண், செங்கல் விற்பனை செய்யும் செல்வம் (40) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதனை ஞானசேகா் கண்டித்தாராம். இந்த நிலையில் ஞானசேகரை வெளியே அழைத்துச் சென்று செல்வம் தனது நண்பருடன் சோ்ந்து அவரை வெட்டிக் கொலை செய்து புதைத்தது விசராணையில் தெரியவந்தது.
இதையடுத்து, செல்வி எ லூா்துமேரி, செல்வம் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், புதைக்கப்பட்ட ஞானசேகரின் உடலை ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுத்து உடல்கூறாய்வு நடத்தப்படவுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.