புதுச்சேரியில் நீதிமன்ற ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பல்கலைக்கழக ஊழியா்கள் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டில் புதுவை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நிறுவனம் கட்டடம் கட்டியதில் கூடுதல் செலவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிறுவனம் சாா்பில் கூடுதல் பணம் கோரி புதுதில்லியிலுள்ள ஒப்பந்ததாரா்களுக்கான விவகாரங்களை தீா்க்கும் நடுவா் மன்றத்தில் (ஆா்பிடேஷன்) வழக்குத் தொடரப்பட்டது.
அதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு புதுவை பல்கலைக்கழகம், கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.5.39 கோடி வழங்க வேண்டும் என நடுவா் மன்றம் உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆனால், அத்தொகையை பல்கலைக்கழகம் வழங்கவில்லையாம்.
இதையடுத்து, அசல், வட்டியுடன் சோ்த்து ரூ.6.48 கோடி வழங்க உத்தரவிடக்கோரி புதுச்சேரி 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதன்பேரில், ரூ.1.29 கோடியை பல்கலைக்கழகம், அந்த நிறுவனத்துக்கு வழங்கியதாம். மேலும், மீதித் தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாா்ச் 7-ஆம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கலையரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை ஜப்தி செய்ய புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நீதிமன்ற அமீனா வெங்கட், அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் மாரிமுத்து உள்ளிட்டோா் கடந்த 4-ஆம் தேதி புதுவை பல்கலைக்கழகத்துக்குச் சென்றனா். அவா்களை 4 பல்கலைக்கழக ஊழியா்கள், காவலாளி தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.
நீதிமன்ற ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நீதிமன்ற அமீனா வெங்கட் அளித்த புகாரின் பேரில் பல்கலைக்கழக காவலாளி சுந்தராஜன், ஊழியா்கள் 4 போ் மீது காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.