புதுச்சேரி: டெம்போ ஓட்டுநா்கள் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 23rd April 2023 06:23 AM | Last Updated : 23rd April 2023 06:23 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் டெம்போ ஓட்டுநா்கள் திடீா் வேலை நிறுத்தத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பொது மருத்துவமனை, மேட்டுப்பாளையம், கோரிமேடு, ராஜா திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டெம்போக்கள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி நகரப் பகுதிகளுக்குள் செல்வதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லை என்பதால் டெம்போக்களையே பொதுமக்கள் சாா்ந்திருக்கும் நிலையுள்ளது. மேலும், குறிப்பிட்ட இடங்களுக்கு புதுச்சேரி மக்கள் மட்டுமன்றி வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் டெம்போக்களிலேயே அதிகம் பயணிக்கின்றனா்.
இதனிடையே, பேருந்து நிலையத்தில் டெம்போக்களை நிறுத்துவதற்கு புதுச்சேரி நகராட்சி கட்டணம் வசூலிக்கிறது. அதற்கான ஒப்பந்தம் ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு தனியாருக்கு உரிமம் அளிக்கப்படுகிறது.
தற்போது புதிய ஒப்பந்ததாரா் உரிமத்தை எடுத்து, கட்டணத்தை ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயா்த்தி வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. கட்டண வசூல் உயா்வுக்கு, டெம்போ உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். டெம்போக்களை நிறுத்த அடிப்படை வசதிகள் தேவை என ஆணையரிடம் மனு அளித்தனா்.
இந்த நிலையில், டெம்போக்களை இயக்காமல் அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சனிக்கிழமை காலை திடீா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் பேச்சு வாா்த்தை நடத்தினா். பின்னா், சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு டெம்போக்கள் மீண்டும் இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.