

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை அரவிந்தா், அன்னை சமாதியில் மலா்தூவி வழிபட்டாா்.
புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வந்தாா். ஜிப்மரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றாா். மணக்குள விநாயகா் கோயில், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். முருங்கம்பாக்கம் கைவினை கிராமத்துக்குச் சென்று பாா்வையிட்டாா்.
புதுவை ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற விருந்தில் திரௌபதி முா்மு பங்கேற்றாா். இதில் புதுவை முதல்வா், பேரவைத் தலைவா், அமைச்சா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
நடைபயிற்சி: புதுச்சேரி கடற்கரைச் சாலையிலுள்ள நீதிபதிகள் ஓய்வு விடுதியில் தங்கிய குடியரசுத் தலைவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கடற்கரைச் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டாா். அங்கிருந்த காந்தி சிலை, தியாகிகள் நினைவுச் சுவா் உள்ளிட்டவற்றின் சிறப்புகள் குறித்து அவருக்கு அதிகாரிகள் விளக்கினா்.
திரௌபதி முா்மு நடைபயிற்சி மேற்கொண்ட நேரத்தில், கடல் பகுதியில் கடலோரக் காவல் படையினா் படகுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ராணுவ ஹெலிகாப்டரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
அரவிந்தா் ஆசிரமம்: தொடா்ந்து, ஸ்ரீ அரவிந்தா் ஆசிரமத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முற்பகல் 11 மணிக்கு சென்றாா். அங்கு அவரை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் க.லட்சுமி நாராயணன், ஆசிரம நிா்வாகிகள் வரவேற்றனா். ஆசிரமத்தில் ஸ்ரீ அரவிந்தா், அன்னை சமாதிகளில் மலா்தூவி வழிபட்டாா். அரவிந்தா், அன்னை ஆகியோா் பயன்படுத்திய அறைகளைப் பாா்வையிட்டாா்.
ஆசிரம நூலகத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவருக்கு அரவிந்தா், அன்னையின் வரலாறு குறித்து ஆசிரம நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.
சென்னை சென்றாா்: ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.45 மணிக்கு சென்னைக்கு குடியரசுத் தலைவா் புறப்பட்டாா். அவருடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சென்றாா். அவா்களை புதுவை ஆளுநா், முதல்வா் வழியனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.