புதுவைக்கான காவிரி நீா் அளவிடும் இடத்தை மாற்ற அரசு வலியுறுத்தல்
By DIN | Published On : 13th August 2023 11:24 PM | Last Updated : 13th August 2023 11:24 PM | அ+அ அ- |

புதுவை மாநிலத்துக்கான காவிரி நீரை அளவிடும் இடத்தை மாற்றவேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தில்லியில் காவிரி ஆணையக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காணொலி மூலம் தமிழகம், புதுவை அதிகாரிகள் பங்கேற்றனா். காரைக்காலில் இருந்து காணொலி வாயிலாக புதுவை அரசு பொதுப் பணித் துறைச் செயலா் மணிகண்டன் மற்றும் தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
அப்போது புதுவை அரசு தரப்பில் ஆணையத்திடம் கூறியதாவது:புதுவை மாநிலம் காரைக்காலுக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 0.250 டிஎம்சி தண்ணீா் வழங்கியிருக்கவேண்டும். ஆனால், கடந்த ஜூலை வரையில் 0.181 டிஎம்சி அளவே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுவை காரைக்காலுக்கு கிடைக்கவேண்டிய 0.690 டிஎம்சி கிடைக்கவில்லை.
ஆகஸ்ட் மாத நீா்த் தேவையின் அளவு 1.050 டிஎம்சி ஆகும். ஆனால், அந்த நீா் இதுவரை காரைக்காலுக்கு வழங்கப்படவில்லை. ஆகவே, குறுவை சாகுபடிக்காக காவிரி நீரை நம்பிய விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். ஆகவே, காரைக்காலுக்கான தண்ணீரை திறந்துவிட கா்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவிடவேண்டும்.
காரைக்காலுக்கான தண்ணீா் வருவதை உண்மையாக அளவீடு செய்வதற்கு ஏற்றவகையில் காவிரி நீா் அளவிடும் இடத்தையும் மாற்றவேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.