புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஒளி வெள்ளத்தில் மின்னிய காந்தி சிலைத் திடல்

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் 2023 புத்தாண்டை இசை வெள்ளத்தில் மிதந்தபடி ஆரவாரமிட்டு வரவேற்று மகிழ்ந்தனா். அந்தப் பகுதியே வண்ண மின்விளக்குகள
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி பாண்டி மெரீனா கடற்கரையில் குவிந்த சுற்றலாப் பயணிகள்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி பாண்டி மெரீனா கடற்கரையில் குவிந்த சுற்றலாப் பயணிகள்.
Updated on
1 min read

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் 2023 புத்தாண்டை இசை வெள்ளத்தில் மிதந்தபடி ஆரவாரமிட்டு வரவேற்று மகிழ்ந்தனா். அந்தப் பகுதியே வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது.

புத்தாண்டை வரவேற்கும் இடங்களில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை திடல் முக்கிய இடம் வகிக்கிறது. புத்தாண்டுக்கு புதுவையைத் தோ்வு செய்து வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்திருந்தனா். சனிக்கிழமை மாலை முதலே கடற்கரைக்கு வெளிநாட்டு, வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் கும்பல் கும்பலாக வரத்தொடங்கினா். கடற்கரைப் பகுதிக்கு வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டது. மேலும், 7 இடங்களில் மெட்டல் டிடெக்டா் வாயில் அமைத்து மக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

கடற்கரையில் உள்ள புங்கை மரங்களும், தென்னைகளும் வண்ண மின்விளக்கால் ஜொலித்தன. மேரி கட்டடம், பிரான்ஸ் ராணுவ வீரா் நினைவிடம், காந்தி சிலை, டியூப்ளே சிலை உள்ளிட்ட பகுதிகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

காந்தி சிலை அருகே இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடலுக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தும் ஏராளமானோா் கடல் அலையில் குளித்தனா். குடும்பம் குடும்பமாக வந்தவா்கள் கடற்கரையோரம் தங்கியிருந்து புத்தாண்டை கொண்டாடினா். பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும் கடற்கரையில் குவிந்து புத்தாண்டை கொண்டாடினா்.

கடற்கரையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் தீபிகா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீஸாா் சனிக்கிழமை மாலை முதலே பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனா். கண்காணிப்பு கேமரா, டிரோன் மூலம் கூட்டத்தை கண்காணித்தனா்.

புதுச்சேரி கடற்கரையைப் போலவே, பாண்டி மெரீனா, ஈடன் காா்டன் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பெரிய விடுதிகளில் ஆடல், பாடலுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சத்தமாக இசையை வெளிப்படுத்தி கடற்கரையில் இளைஞா்கள் முதல் அனைவரும் ஆடியும், பாடியும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com