கிராமங்களில் பணியாற்ற மருத்துவா்கள் முன்வர வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
By DIN | Published On : 12th January 2023 02:24 AM | Last Updated : 12th January 2023 02:24 AM | அ+அ அ- |

புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவ மாநாட்டைத் தொடக்கிவைத்து பேசுகிறாா் முதல்வா் என்.ரங்கசாமி.
கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவா்கள் முன்வர வேண்டும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கேட்டுக் கொண்டாா்.
புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத் துறை சாா்பில், கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மாநாட்டைத் தொடக்கிவைத்து பேசியதாவது:
இந்திய அளவில் 50 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற நிலை உள்ளது. ஆனால், புதுவையில் 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
கிராமப்புற செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களும் கிராமங்களில் களப்பணியாற்றி நோய்த் தடுப்பு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வருகின்றனா். மருத்துவப் படிப்பை படித்துவிட்டு வரும் மருத்துவா்கள் கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற முன்வர வேண்டும். கிராமங்களில் சுகாதார வசதி சிறப்பாக இருந்தால்தான் நோய்ப் பரவல் இருக்காது.
பின்தங்கிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக அமைவதற்கு புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காசநோயைக் கண்டறிய நடமாடும் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பான மருத்துவ வசதியைக் கொடுக்கும் மாநிலமாக புதுவை மாற்றப்படும் என்றாா் அவா்.
மாநாட்டின் ஒரு பகுதியாக காசநோய், தட்டம்மை ஒழிப்பு, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, தொற்றாத நோய்கள், புகையிலைக் கட்டுப்பாடு, நோய்த் தடுப்பு சிகிச்சை உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு இடையே வினாடி- வினா, கட்டுரை, வாய்மொழி போட்டிகள் நடத்தப்பட்டன.
சட்டப்பேரவை உறுப்பினா் கேஎஸ்பி. ரமேஷ், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக மருத்துவத் துறை பேராசிரியை கவிதா வாசுதேவன், உதவிப் பேராசிரியா் சுரேந்திரன் மற்றும் புதுவை, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.