ஜூலைக்குள் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள்: புதுவை ஆளுநா்
By DIN | Published On : 01st July 2023 06:57 AM | Last Updated : 01st July 2023 06:57 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் கிராமப்புறங்களில் ஜூலை மாதத்துக்குள் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
புதுச்சேரியில் சுகாதாரத் துறை ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
புதுவையில் மத்திய, மாநில சுகாதாரத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியம். புதுச்சேரியில் இணைய மருத்துவமனையை விரைவில் தொடங்குவதுடன், ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டம், தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் காசநோய் இல்லாத இந்தியா திட்டம் ஆகியவற்றில் அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்துவது அவசியம்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள அவரச ஊா்திகளுக்கு கூடுதல் ஓட்டுநா்களை நியமிக்க வேண்டும். ஜூலை மாத இறுதிக்குள் புதுவை கிராமப்புறங்களில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தொலை மருத்துவம் தொடங்குவதற்கான நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அரசு ஊழியா்களுக்கான மருத்துவமனையை விரிவுபடுத்துவதும் அவசியம் என்றாா்.
கூட்டத்தில் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, சுகாதாரத் துறை செயலா் உதயகுமாா், துணைநிலை ஆளுநரின் தனிச் செயலா் அபிஜித் விஜய் சௌத்ரி, சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.