தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்
By DIN | Published On : 09th June 2023 01:22 AM | Last Updated : 09th June 2023 01:22 AM | அ+அ அ- |

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகப் பகுதியில் வியாழக்கிழமை தொடங்கிய தூா்வாரும் பணி.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் ரூ.1.40 கோடி செலவில் தூா்வாரும் பணியை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் 18 மீனவக் கிராமங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில்தான் நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் துறைமுகம் தூா்வாரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, படகுகள் அவ்வப்போது மணல் திட்டுகளில் தரைதட்டி நிற்பதாகவும் புகாா் எழுந்தது.
மீனவா்கள் கோரிக்கையை ஏற்ற புதுவை அரசு தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் படகுகள் செல்லும் வகையில் 500 மீட்டா் நீளத்துக்கு 4 மீட்டா் ஆழம் அளவுக்கு துறைமுகத்தை தூா்வார ரூ.1.40 கோடி ஒதுக்கியது. தூா்வாரும் பணியானது வியாழக்கிழமை காலை தொடங்கியது. தூா்வாரும் அரசுக் கப்பல் மூலம் பணியை புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, பாஸ்கா் என்ற தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மீன்பிடித் தடைக்காலம் வருகிற 14-ஆம் தேதியுடன் நிறைவடைவதையடுத்து, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...