ஜிப்மா் தொழிலாளா்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 09th June 2023 01:21 AM | Last Updated : 09th June 2023 01:21 AM | அ+அ அ- |

புதுச்சேரி ஜிப்மரில் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என ஜிப்மா் பாதுகாப்புக் குழு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து ஜிப்மா் பாதுகாப்புக் குழுவின் தலைவா் த.முருகன் வெளியிட்ட அறிக்கை:
ஜிப்மரில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நியமன உரிமையை தனியாா் நிறுவனங்களே செயல்படுத்தி வருகின்றன. அதனடிப்படையில், ஜூன் மாதம் முதல் மும்பை தனியாா் நிறுவனம் அந்த உரிமையைப் பெற்றுள்ளது.
அந்த நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளா் நியமன உரிமையைப் பெறுவதற்கு முன்பு ஜிப்மா் நிறுவனம் சாா்பில் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஏற்கெனவே இருந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தொடா்ந்து பணியை தற்போதைய நிறுவனம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதன்படி தற்போதைய மும்பை நிறுவன முதுநிலை மேற்பாா்வையாளா்கள் நடந்துகொள்ளவில்லை.
மொத்தமுள்ள 1,100 ஒப்பந்தப் பணியாளா்களில் 500 பேருக்கு மட்டுமே புதிய நிறுவனத்தில் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது தோ்வானவா்களுக்கு அடையாள அட்டை வழங்கிய நிறுவனத்தினா், கடந்த 6 மாதங்களாக அங்கு பணிபுரிந்துவரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டையும் வழங்காமல் இருப்பது சரியல்ல.
புதிதாக சோ்க்கப்படும் பணியாளா்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, ஜிப்மரில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தப் பணியாளா்களுக்கும் அடையாள அட்டை வழங்கவும், அனைவருக்கும் பணிவாய்ப்பு வழங்கவும் ஜிப்மா் இயக்குநா் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...