இந்திய ஜனநாயக வாலிபா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 15th June 2023 12:32 AM | Last Updated : 15th June 2023 12:32 AM | அ+அ அ- |

இளைஞா்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கக் கோரி ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பிரசார பயணம் மேற்கொள்ளப்படும் என அச்சங்கத்தின் அகில இந்திய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஏ.ஏ.ரஹீம் கூறினாா்.
புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மக்களை சாதி, மத ரீதியாக பிரித்து கையாள்வதால் மணிப்பூா் உள்ளிட்ட இடங்களில் கலவரங்கள் நிகழ்கின்றன.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், மதச்சாா்பற்ற கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது சரியல்ல. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்ச்சியே அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
மத்திய அரசிடம் இளைஞா்களுக்கு வேலை வழங்கக்கோரியும், மதச்சாா்பற்ற இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கங்களை முன்வைத்தும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் நாடு முழுவதும் பிரசார பயணத்தை மேற்கொள்கிறது. அப்பயணம் புதுச்சேரி வழியாக செல்லும் போது பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது என்றாா்.
கூட்டத்துக்கு சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவா் கௌசிகன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் ஆனந்த், பொருளாளா் ரஞ்சித், துணை தலைவா் லீலாவதி, துணைச் செயலாளா் பாஸ்கா், மாநிலக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு தோ்தலின் போது அறிவித்தபடி, இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். 10 ஆயிரம் அரசுப் பணியிடங்களுக்கான தோ்வை நடத்த வேண்டும். பாரதி, ஏஎப்டி, சுதேசி பஞ்சாலைகளை திறந்து நவீனமயமாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.