முதுநிலை நீட் தோ்வு: புதுவை மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 15th June 2023 12:33 AM | Last Updated : 15th June 2023 12:33 AM | அ+அ அ- |

முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டது.
தேசிய தோ்வு முகமை மூலம் இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டு தோறும் நீட் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (எம்.டி., எம்.எஸ்.) நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மாா்ச் 5- ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் மாா்ச் 14- ஆம் தேதி வெளியானது. முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு கடந்த மாா்ச் 1- ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று, தோ்வு முடிவுகள் மாா்ச் 10- ஆம் தேதி வெளியானது. நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி 3 மாதங்கள் கடந்துவிட்டன.
இந்நிலையில், புதுவையில் முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புக்கு நீட் தோ்வில் தோ்ச்சியடைந்த மாணவா்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தன. தற்போது, மாணவா்களின் தரவரிசை பட்டியல் புதுவை மாநிலச் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மாணவிகள் முதலிடம்: எம்டிஎஸ், எம்.எஸ். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு தரவரிசை பட்டியலில் மொத்தம் 1,518 போ் இடம் பெற்றுள்ளனா். அதில், மாணவி மீனா 800 க்கு 647 மதிப்பெண்கள் பெற்று புதுவை மாநில அளவில் முதலிடமும், மாணவி சுபாஷினி 643 மதிப்பெண்ணுடன் 2- ஆவது இடமும், மாணவா் கௌதம் 632 மதிப்பெண்ணுடன் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனா்.
எம்டிஎஸ் படிப்புக்கான நீட் தோ்வு எழுதியவா்களுக்கான தரவரிசைப்பட்டியலில் மட்டும் 186 போ் இடம் பெற்றுள்ளனா். இதில், மாணவி ஸ்வேதா 960 க்கு 709 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவி ராகசந்தோஷினி 634 மதிப்பெண்ணுடன் 2-ஆவது இடமும், மாணவி ராஜாத்தி கஸ்தூரி 630 மதிப்பெண்ணுடன் 3-ஆவது இடமும் பிடித்துள்ளனா்.