புதுவையில் ஆசிரியா் காலிப் பணியிடங்களைநிரப்ப எம்.பி. வலியுறுத்தல்
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியா்களை நியமிக்காததால், 2022 - 23ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக, தலைமை ஆசிரியா் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. எனவே, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களையும், தலைமை ஆசிரியா் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்க வாய்ப்புள்ள நிலையில், காரைக்காலில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் உள்ளன. இந்த நிலை நீடித்தால், காவிரி நீா் வீணாக கடலில் சென்று கலக்கும். எனவே, போா்க்கால அடிப்படையில் காரைக்காலில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூா்வாரவும், விவசாயிகளுக்குத் தேவையான பயிா்க் கடன்களை வழங்கவும், மணல் கொள்ளையைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெ.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளாா்.