

புதுவை மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி நிறைவேற்றவில்லை என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.
மண்ணாடிபட்டு தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில இணைச் செயலா் எம். மகாதேவி தலைமை வகித்தாா். மாநில ஜெ. பேரவைச் செயலாளா் சுத்துக்கேணி ஏ.பாஸ்கரன், மாநில சிறுபான்மைப் பிரிவு செயலாளா் டி.எச்.நாசா், பொதுக்குழு உறுப்பினா் ஏ.மகாதேவன், எஸ்.எம்.ஆா்.பாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் பேசியது: பாஜகவின் தன்னிச்சையான முடிவுகளால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதுவை மாநிலத் தலைவரான முதல்வா் என். ரங்கசாமி, பாா்வையாளராக மட்டுமே உள்ளாா். புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தனா். ஆனால், அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. விவசாயிகள் வங்கியிலும், கூட்டுறவு வங்கிகளிலும் பெற்ற கடன்களுக்கு அரசு பணம் செலுத்தவில்லை. அதனால், விவசாயிகள் புதிய கடன்கள் பெற முடியவில்லை.
பாஜகவின் தோ்தல் அறிக்கையில் கூட்டுறவு சா்க்கரை ஆலையை உடனடியாக திறப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அதைத் திறக்கவில்லை. பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.